உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் ஆய்வு: வரி பாக்கிகளை விரைவாக வசூலிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவு


உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் ஆய்வு: வரி பாக்கிகளை விரைவாக வசூலிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2018 10:45 PM GMT (Updated: 29 Nov 2018 7:33 PM GMT)

உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி வரிபாக்கிகளை வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி, 

புதுவை கவர்னர் கிரண்பெடி அரசு அலுவலகங்களில் தினமும் ஆய்வு செய்து வருகிறார். நேற்று உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உள்ளாட்சித்துறை சார்பில் வசூலிக்கப்படும் வரிகள், வசூலிக்கப்படாமல் உள்ள பாக்கிகள் குறித்த விவரம் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக புதுச்சேரி நகராட்சியில் ரூ.9 கோடியே 15 லட்சம் வசூலிக்க திட்டமிட்ட நிலையில் ரூ.3 கோடியே 38 லட்சமே வசூலாகி இருந்தது. அதாவது 37 சதவீத அளவுக்கு மட்டுமே வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

உழவர்கரை நகராட்சியில் ரூ.8 கோடியே 39 லட்சத்துக்கு பதில் ரூ.2 கோடியே 82 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகராட்சியில் ரூ.3½ கோடிக்கு பதில் ரூ.22 லட்சத்து 87 ஆயிரம் மட்டுமே வசூலாகி உள்ளது. அதாவது 6.47 சதவீதம் மட்டுமே வசூலானது.

இதேபோல் கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் குறைந்த அளவிலேயே வரிகள் வசூலிக்கப்பட்டிருப்பதாக பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து வரிபாக்கிகளை விரைந்து வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

Next Story