கடன் தொல்லையால் அவதி: கூட்டுறவு நூற்பாலை ஊழியர் தற்கொலை


கடன் தொல்லையால் அவதி: கூட்டுறவு நூற்பாலை ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட கூட்டுறவு நூற்பாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர், 

வில்லியனூர் வசந்தம் நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கூட்டுறவு நூற்பாலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் கிருஷ்ணமூர்த்தி குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் குடும்பச் செலவுக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அவரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அவருடைய மனைவி வீட்டுக்கு வந்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கிருஷ்ணமூர்த்தியை டாக்டர் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story