சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வழங்கும் ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வழங்கும் ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 30 Nov 2018 4:15 AM IST (Updated: 30 Nov 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மருந்து வழங்கும் ஊழியர்களுடன் நோயாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காலி இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை ஒழிப்பது, தெருவில் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், தண்ணீர் தொட்டியில் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அதிகளவில் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் வெளிநோயாளிகளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.

வழக்கமாக செவ்வாய்க் கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனால் நேற்று வியாழக்கிழமை என்பதால் காலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருந்து வாங்குவதற்காக மருந்து கவுண்ட்டர்களில் குவிந்தனர். மொத்தம் உள்ள 6 கவுண்ட்டர்களில் நேற்று 2 மட்டுமே திறக்கப்பட்டிருந்ததால் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த நோயாளிகள், மருந்து வழங்கும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் மருந்தாளுனர்களை நியமித்து மருந்து வழங்க வேண்டியது தானே? என கேள்வி கேட்டனர். கவுண்ட்டரில் இருந்த மருந்து வழங்கும் ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றதால் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மருந்து வாங்க வரிசையில் நின்றிருந்தவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர்.

அப்போது, ஆஸ்பத்திரியில் மருந்து வழங்கும் ஊழியர்கள் சிலர் கூறும்போது, கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மருந்தாளுனர்கள் சென்றிருப்பதால் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதை புரிந்து கொள்ளாமல் மாத்திரைகள் வாங்க வந்த நோயாளிகள் காலதாமதம் ஏற்படுவதாகக்கூறி தகராறில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர். பின்னர், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கி சென்றனர்.

Next Story