கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி
x
தினத்தந்தி 29 Nov 2018 11:15 PM GMT (Updated: 29 Nov 2018 8:34 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

வேதாரண்யம்,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று தஞ்சையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மாலை 4.20 மணிக்கு நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு வந்தார். அங்கு உள்ள விமானப்படை தளத்தில் அவருடைய ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

அவரை தமிழக அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, வேலுமணி மற்றும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சுகாதார செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கார் மூலமாக வேதாரண்யம் வந்தார். வரும் வழியில் அகஸ்தியம்பள்ளியில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் தோப்புத்துறை தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜனதா சார்பில் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரிசி, பிஸ்கட் பாக்கெட்டுகள், போர்வை, கொசுவர்த்தி, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நிவாரண பொருட்களை வழங்கி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

வேதாரண்யத்துக்கு நான் காரில் வந்தபோது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தேன். சேதமதிப்பு சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். கிராமப்புறத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்க மத்திய அரசு மூலம் தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பயிர்க்காப்பீட்டு திட்டத்துக்கு 70 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும், விவசாயிகள் 5 சதவீதமும் கட்ட வேண்டும். விவசாயிகள் கட்ட வேண்டிய 5 சதவீத காப்பீட்டு தொகையை தமிழக அரசே கட்டி விட்டு, விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரண தொகையில் பிடித்தம் செய்ய வேண்டும் என்று பொறுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்து உள்ளேன்.

புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு அறிக்கை கொடுத்துள்ளனர். அதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை அளித்துள்ளார். தமிழக அரசும் அறிக்கை கொடுத்துள்ளது. நானும் பாதிப்புகள் குறித்து அறிக்கை கொடுப்பேன்.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமையாக இருங்கள். அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும். ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளம் சேறு புகுந்து பாதிப்படைந்துள்ளது. உப்பளங்களை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story