திருச்சுழி தொகுதியில்: வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றாததை கண்டித்து நாளை உண்ணாவிரதம் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அறிவிப்பு


திருச்சுழி தொகுதியில்: வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றாததை கண்டித்து நாளை உண்ணாவிரதம் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 3:15 AM IST (Updated: 30 Nov 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி தொகுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றக்கோரி நாளை எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காரியாபட்டி,


திருச்சுழி தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பல பணிகள் ஒப்பந்தப்புள்ளிகள் வாயிலாகவும், நீண்ட கால பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் அந்தப் பணிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

உதாரணமாக கல்குறிச்சி- மல்லாங்கிணறு-விருதுநகர் நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலையாக இருப்பினும் மிக மோசமான நிலையிலேயே கடந்த 7 ஆண்டுகளாக பராமரிப்பின்றி வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது. இதே நிலைதான் தொகுதியில் உள்ள ஏனைய சாலைகளுக்கும் நீடிக்கிறது.

மேலும் திருச்சுழி தொகுதியில் அமைந்துள்ள காரியாபட்டி ஒன்றிய பகுதிகளான ஆவியூர், மாங்குளம், அரச குளம், கம்பிக்குடி, உப்பிலிக் குண்டு போன்ற கிராமங்களில் விவசாய வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான வைகை நீர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுவதற்கு பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இதே போல் நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் கிருதுமால் நதி மூலம் வைகை நீர் பாசனத்துக்கு வழங்கப்படுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. சென்னம்பட்டி கால்வாய் திட்டம் பராமரிப்பின்றி பழுது மேலோங்கி உள்ளது. தெற்காறு-குண்டாறு திட்டம் இன்னும் துறையில் ஏட்டளவிலேயே இருக்கிறது. எனவே தொகுதியில் தேவையான வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், தொகுதி மக்களின் உணர்வை எதிரொலிக்கும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் காரியாபட்டியில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story