கோவில்பட்டி அருகே தெருநாய்களிடம் சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்பு


கோவில்பட்டி அருகே தெருநாய்களிடம் சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 4:52 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தெருநாய்களிடம் சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே தெருநாய்களிடம் சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

வழி தவறி வந்த புள்ளிமான்

கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. நேற்று அதிகாலையில் குருமலையில் இருந்து வழி தவறி வந்த 4 வயது பெண் புள்ளிமான், கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் மீனாட்சிநகர் 5–வது தெருவில் சுற்றி திரிந்தது. உடனே தெருநாய்கள் அந்த புள்ளிமானை விரட்டிச் சென்று, கடித்து குதறின.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தெருநாய்களை விரட்டி விட்டு, அந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் அதனை அங்குள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர்.

கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதுகுறித்து கோவில்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனச்சரகர் சிவராம், வனவர் நாகராஜ், வன காப்பாளர் லீலாதேவி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த புள்ளிமானை காரில் ஏற்றிச் சென்று, கோவில்பட்டி கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த புள்ளிமானை குருமலை வனப்பகுதியில் விட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘வழக்கமாக கோடை காலத்தில் புள்ளிமான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி, மலை அடிவார பகுதிக்கு வருவது வழக்கம். தற்போது வழி தவறி வந்த புள்ளிமானை தெருநாய்கள் கடித்து குதறின. எனவே குருமலையில் இருந்து புள்ளிமான்கள் வெளியேறாத வகையில், மலை அடிவார பகுதியில் தடுப்பு கம்பிவேலிகள் அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.


Next Story