கைதிகளை திருத்தும் பொறுப்பு சிறை அதிகாரிகளுக்கு உள்ளது கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா பேச்சு
கைதிகளை திருத்தும் பொறுப்பு சிறை அதிகாரிகளுக்கு உள்ளது என்று கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.
வேலூர்,
வேலூரில் உள்ள சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் (ஆப்கா) 19 பெண் உதவி சிறை அலுவலர்கள் உள்பட 66 பேருக்கு கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி முதல் நேற்று வரை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் அவர்களுக்கு சிறை நிர்வாகம், குற்றவியல், உளவியல், சமூகவியல், மனித உரிமைகள், துப்பாக்கி சுடுதல் மற்றும் சட்டம் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
இதன் நிறைவு விழா வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறை அருகில் உள்ள கவாத்து பயிற்சி மையத்தில் நடந்தது. பயிற்சி முடித்த உதவி சிறை அலுவலர்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் கூடுதல் டி.ஜி.பி.யும் சிறைத்துறை ஐ.ஜி.யுமான அசுதோஷ் சுக்லா கலந்துகொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி அவர் பேசியதாவது:–
இன்று பயிற்சி முடித்து செல்லும் நீங்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கக் கூடியவர்கள். மேலும் எளிதில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வழிப்பறி செய்பவர்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்வார்கள். எனவே அவர்களை திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. கைதிகளுக்கு சட்டப்படி மட்டுமே உதவி செய்ய வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக எந்தவித உதவியும் செய்யக்கூடாது.
கைதிகளின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறையில் இருக்கும் கைதிகளை திருத்த வேண்டிய முக்கிய பொறுப்பு உதவி சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. சிறையிலும் கைதிகள் ஷூ தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
எனவே சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே செல்பவர்கள் சுயமாக வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். விடுதலையானவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழும் அளவிற்கு அவர்களது மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்க போதிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆப்கா இயக்குனர் வி.எஸ்.ராஜா, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், அறிவுடைநம்பி, ஜெயபாரதி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், பேராசிரியர்கள் மதன்ராஜ், பியூலா, கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story