பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஊட்டி, கோத்தகிரியில் ரூ.71 ஆயிரம் அபராதம் வசூல்


பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஊட்டி, கோத்தகிரியில் ரூ.71 ஆயிரம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, கோத்தகிரியில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ரூ.71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அதன் அழகை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலையோரங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளிசங்கர் மற்றும் அதிகாரிகள் ஊட்டியில் பழைய பென்சார் சாலையில் உள்ள சாக்லேட் விற்பனை நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தினார்கள். சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கரண்டி, பிளாஸ்டிக் கோட்டிங் போடப்பட்ட பேக்கிங் பைகள் உள்ளிட்டவை 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக சாக்லேட் விற்பனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது. இதேபோல் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று கோத்தகிரி மார்க்கெட், பழைய போலீஸ் நிலைய சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 10 கடைகளுக்கு மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது. 

Next Story