கூடலூர், பந்தலூரில்: ஆதிவாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு 1,200 வீடுகள் - கலெக்டர் பேட்டி
கூடலூர், பந்தலூரில் ஆதிவாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு 1,200 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள ஆதிவாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலக அரங்கில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாபு, ஆர்.டி.ஓ. முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பார்வதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் குணாளன், வேணு, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிவேலு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வாழும் ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பது குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினர். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் என பல்வேறு திட்டங்களின் கீழ் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 1,200 வீடுகள் கட்டப்பட உள்ளது. இத்திட்டங்களில் ஆதிவாசிகள் மற்றும் தகுதி உள்ள பொதுமக்கள் பயன்பெற உள்ளனர். ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இப்பணம் போதுமானதாக இல்லை என அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தேர்வு செய்யப்பட்ட ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் கட்டும் திட்டத்தை தொடங்காமல் வைத்துள்ளனர். இதனால் பயனாளிகள், அரசு ஒப்பந்ததாரர்கள், அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆதிவாசி மக்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி போதுமானதாக இல்லை என்பதால் அரசிடம் கூடுதல் நிதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில ஆதிவாசி மக்கள் தாங்களாகவே வீடுகளை கட்டி கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். கூடலூர் பகுதியில் சில மாதங்களில் பருவமழைக்காலம் தொடங்க உள்ளது. அதற்குள் வீடுகள் கட்டும் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இதற்காக அந்தந்த பகுதியில் செங்கல் தயாரித்து வீடுகள் கட்ட ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஊராட்சி பகுதியில் 528 வீடுகள் கட்டப்பட உள்ளது.
பட்டா நிலம் வைத்துள்ள தாயகம் திரும்பிய மக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். அந்த நிலம் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்தாலும் தேர்வு செய்யப்படும். முதுமலை ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதேபோல் கூடலூர் நகரில் சாலையின் நடுவில் புதியதாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை அகற்றுவது குறித்து நானும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story