கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Nov 2018 11:15 PM GMT (Updated: 30 Nov 2018 5:45 PM GMT)

ருஷ்ணகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ-மாணவிகள் 10 பேருக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதியை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் “தினத்தந்தி” மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி வந்தது. மேலும் மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் “தினத்தந்தி”யின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த பரிசு திட்டத்தை 2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக “தினத்தந்தி” கல்வி நிதி திட்டமாக அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 10 மாணவ, மாணவிகள் என தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 340 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் வழங்கப்படுகிறது.

அதன்படி 2017-2018-ம் கல்வி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தலா ரூ.10 ஆயிரம் “தினத்தந்தி” கல்வி நிதி பெற தகுதி பெற்ற 10 மாணவ-மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஜி.சந்தியா, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி. 2. எஸ்.நேத்ரா, வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை. 3. ஜெ.பிரின்ஸி ஷாலோம், டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி. 4. பி.ரேவதி, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குந்தாரப்பள்ளி. 5. வி.கோகிலா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூளகிரி. 6. கே.விபிஷா, ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இருமத்தூர். 7. கே.திருமலை, அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெகதாப், பெரிய ஆயகான்கொட்டாய், 8. டி.கோகுல்நாதன், அரசு உயர்நிலைப்பள்ளி, பெலவர்த்தி, 9. எம்.லோகநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி, அகரம், சுண்டகாப்பட்டி, 10. எம்.தினேஷ்குமார், செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“பொருளாதாரத்தில் பின்தங்கிய 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “தினத்தந்தி” நாளிதழ் சார்பில் கல்வி உதவித்தொகை இன்றைய தினம் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவிகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும், நன்கு படித்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் கல்வி உதவித்தொகை “தினத்தந்தி” சார்பில் வழங்கப்படுகிறது. கல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் ஆகும். பிளஸ்-2 வரையில் படிக்கிற காலத்தில் நீங்கள் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்க்கைக்கு நல்ல செயல்வழியை கொடுப்பது பள்ளி தான். மாணவ- மாணவிகளாகிய நீங்கள் நன்றாக படித்தால் தான் நல்ல கல்லூரிகளில் சேர முடியும். மேலும் விருப்பமான பாடங் களை தேர்வு செய்ய முடியும். எனவே பள்ளி பருவத்திலேயே நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். அதேபோல போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்கு நீங்கள் படிக்க வேண்டும்.

கலெக்டராகிய நான் பல்வேறு தரப்பு மக்களை தினமும் சந்திக்கிறேன். பலரும் தாங்கள் கல்லூரியில் படித்து விட்டு வேலை தேடுவதாக கூறுகிறார்கள். பட்டப்படிப்புகளை படித்தாலும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்கிற அளவிற்கு திறமைகளை வளர்த்துக் கொண்டு படிக்க வேண்டும். அதேபோல பொது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். பள்ளி பருவத்தில் இருந்தே மாணவ- மாணவிகள் அனைவரும் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு செய்தித்தாள் வாசிப்பது முக்கியமான ஒன்றாகும். 8, 9-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் தினமும் அரைமணி நேரம் செய்திகளை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளவேண்டும். அவ்வாறு படித்தால் தான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். பொது அறிவை வளர்த்துக் கொண்டால் மட்டுமே போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளமுடியும்.

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் படிக்க கூடிய நடுநிலையான நாளிதழாக “தினத்தந்தி” விளங்குகிறது. நம்பர் 1 நாளிதழாக இருக்க கூடிய “தினத்தந்தி” பல்வேறு செய்திகளை நடுநிலையுடன் கொடுத்து வருகிறது. அத்தகைய “தினத்தந்தி” நிறுவனத்தின் சார்பில் இன்றைய விழாவில் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய மாணவ-மாணவிகளாகிய நீங்கள் வாழ்க்கையில் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். மேலும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிற “தினத்தந்தி” நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வாழ்த்தி பேசும்போது கூறியதாவது:- “கல்வி தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு உருவாக்குகிறது. மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். தற்போது அறிவியல் வளர்ச்சி நன்றாக உள்ளது. அதை நாம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு நல்ல கல்வியுடன், ஒழுக்கமும் அவசியம். இவை இரண்டும் தான் ஒருவனை நல்ல மனிதனாக உருவாக்குகிறது.

“தினத்தந்தி” சார்பில் மாணவ-மாணவிகளுக்காக வினா-விடை புத்தகம் வழங்கி வருகிறார்கள். நீங்கள் அனைவரும் நன்றாக படியுங்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகுங்கள். உங்களுக்கு “தினத்தந்தி” உறுதுணையாக உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் வ.ராஜா, கிருஷ்ணகிரி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக “தினத்தந்தி” சேலம் கிளை மேலாளர் டி.ஜெகதீசன் வரவேற்றார். விழாவில் பள்ளிகள் துணை ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் அருள்நாதன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கே.சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story