ஓசூரில் நிதி நிறுவன அதிபரை கடத்த முயற்சி: பா.ஜ.க. நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ஓசூரில் நிதி நிறுவன அதிபரை கடத்த முயன்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தின்னூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது55). நிதி நிறுவன அதிபர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்திவாடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, திடீரென காரில் அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், குப்புசாமியை கடத்த முயன்றது. அவர்களிடமிருந்து தப்பித்த அவர், இதுகுறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, ஓசூரில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் ’ஜிம்‘ ரவி(35), அவரது நண்பர்களான மூக்கண்டபள்ளியை சேர்ந்த விக்னேஷ்வர்(22), மத்திகிரியை சேர்ந்த பிரபு(24), தின்னூரை சேர்ந்த சசிக்குமார்(22) ஆகிய 4 பேரும் குப்புசாமியை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, மத்திகிரி போலீசார் அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் சூடாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாதிக்(38) என்பவர் நேற்று முன்தினம் ஓசூர் பக்கமுள்ள கக்கனூர் அருகே சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.1,500 பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றது. அப்போது சாதிக் கூச்சலிடவே, அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து 4 பேரையும் பிடித்து பாகலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 4 பேரும் ஓசூர் நிதி நிறுவன அதிபர் குப்புசாமியை கடத்த முயன்ற ஜிம் ரவி, விக்னேஷ்வர், பிரபு, சசிக்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஜிம் ரவி பா.ஜ.க. அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆவார். மேலும் இவர் மீது ஓசூர் டவுன் மற்றும் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல், அடிதடி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story