ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல: 3-வது மாற்றுப்பாதைக்கான சாலை பணிகளை விரைவாக தொடங்க கோரிக்கை - அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் மனு


ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல: 3-வது மாற்றுப்பாதைக்கான சாலை பணிகளை விரைவாக தொடங்க கோரிக்கை - அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Nov 2018 9:45 PM GMT (Updated: 30 Nov 2018 6:00 PM GMT)

ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதைக்கான சாலை பணிகளை விரைவாக தொடங்கக்கோரி அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. ஊட்டியில் இருந்து குன்னூர், பர்லியார் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலையும், ஊட்டி- கோத்தகிரி, குஞ்சப்பனை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த சாலைகள் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதுதவிர ஊட்டியில் இருந்து மஞ்சூர்-கெத்தை-முள்ளி வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது.

கெத்தையில் இருந்து காரமடைக்கு செல்லும் சாலை மின்வாரியம் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த சாலை வழியாக மஞ்சூர், குந்தா, எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள், மின்வாரியத்தின் லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை வழியாக கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மாற்றுப்பாதை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா உறுதியளித்தார். அதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 3-வது மாற்றுப்பாதை சீரமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை எடுக்க 21 ஏக்கர் வருவாய் நிலத்தை வனத்துறைக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குந்தா தாலுகாவை சேர்ந்த தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பில்லன் தலைமையில், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில கமிட்டி உறுப்பினர் நாகராஜ், ஏ.ஐ.டி.யு.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, மஞ்சூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், 3-வது மாற்றுப்பாதைக்கான சாலை பணிகளை விரைந்து தொடங்கக்கோரி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது:-

குந்தா தாலுகா மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சூர், கெத்தை வழியாக கோவைக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை பழுதடைந்த நிலையில் கற்கள் பெயர்ந்தும், புதர்கள் சூழ்ந்தும் இருக்கிறது.

இந்த சாலையை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊட்டியில் இருந்து கோவைக்கு 3-வது மாற்றுப்பாதை சீரமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார். குந்தா, மஞ்சூர், எடக்காடு, கீழ்குந்தா, கிண்ணக்கொரை போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த வழியாக அரசு பஸ் மற்றும் வாகனங்களில் கோவைக்கு சென்று வருகிறார்கள்.

சாலையோரத்தில் புதர்கள், காடுகள் அதிகமாக உள்ளதால், காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடுகிறது. இதனால் அச்சத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாலையோரத்தில் உள்ள புதர்களை அகற்றி விரைவாக பணிகளை தொடங்கி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது, மஞ்சூர், கெத்தை வழியாக காரமடைக்கு செல்லும் சாலையை மேம்படுத்துவதற்காக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.


Next Story