சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் மற்றும் அதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 20-வது ஆண்டாக கட்டுமான பொருட்களின் கண்காட்சி சேலம் அழகாபுரம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டுமான பொருட்களின் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் தலைவர் மயில்ராஜு, கண்காட்சி சேர்மன் குப்புசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் சங்கர், நிர்வாக செயலாளர் செல்வகுமார், செயலாக்க செயலாளர் சரவணன், பொருளாளர் பிரேம் ஆனந்த் மற்றும் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்காட்சி மலரை போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் வெளியிட்டார். அதை தமிழ்நாடு மாநில கட்டிட பொறியாளர் கூட்டமைப்பின் தலைவர் சையத் சாகீர் பெற்றுக்கொண்டார்.
இக்கண்காட்சியில் கட்டுமான பொருட்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 180-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள், பிளைவுட்ஸ், பிளாஸ்டிக் பைப்கள், டைல்ஸ், கிரானைட்ஸ், மரக்கட்டில்கள், கதவுகள், மின் மோட்டார்கள், பம்புகள், எம்.சாண்டு மணல், மார்பிள்ஸ், வீட்டு அலங்கார துணிகள், பாத்ரூம் பிட்டிங்ஸ் பொருட்கள் உள்பட கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளது.
வருகிற 3-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சங்க அறக்கட்டளை தலைவர் அசோகன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் அசோக் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story