ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்- முகவர்கள் பதிவு கட்டாயம் - கலெக்டர் தகவல்
ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், முகவர்கள் தங்களின் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி,
மத்திய அரசால் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் மேல்முறையீட்டு தீர்வாணையம் ஏற்படுத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்கு விதிகளை வகுத்து சட்டம் இயக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் அரசாணை எண்-112-ன்படி மத்திய அரசின் ரியல் எஸ்டேட் சட்டம் 2016-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.
இத்திட்டத்தின்படி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் அது சார்ந்த முகவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பதிவு செய்தல் கட்டாயமாகிறது. மேலும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், முகவர்கள் தங்களது திட்டம் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இச்சட்டத்தின்படி வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யாவிட்டால் ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த ஒரு விளம்பரம் செய்தல், விற்பனை செய்தல், வாங்குதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைக்கு சலுகைகள் அறிவித்தல் ஆகியனவும், பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்தல், வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படும். இதேபோல், இதில் ஈடுபடும் தரகர்கள், இடைத்தரகர்கள் மற்றும் சொத்து விற்பனையாளர்கள், முகவர்கள் ஆகியோர் இச்சட்டத்தின் கீழ் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதிகள், தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பணிகள், திட்டங்களுக்கும், இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள திட்டங்களுக்கும் பொருந்தும். இதில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி 500 சதுர மீட்டருக்கு மேல் மொத்த பரப்பளவு உள்ள இடங்களுக்கு அல்லது 8 வீடுகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும்.
எனவே ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் www.tnr-e-ra.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் விற்பவர் மற்றும் வாங்குபவர் இருவருமே சமஅளவிலான இழப்பீட்டினை சந்திக்க நேரிடும்.
பதிவு செய்யாதோர் மீது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின்படி குற்றமாக கருதி சிறை தண்டனை வழங்குதல் அல்லது அபராதம் விதித்தல் அல்லது இரண்டும் சேர்த்து வழங்குதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story