மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வயல் வழியாக தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப் பட்டுள்ளது.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பன்னீர்கோட்டகம் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கான மயானம் அந்த கிராமத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை வயல் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.
மழை அதிகம் பெய்தால் வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடந்து சென்றுதான் உடலை அடக்கம் செய்ய வேண்டும். தற்போது மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயல்களில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பன்னீர்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம்(வயது 70), உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அவரின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. அப்போது அவரது உடலை பாடையில் வைத்து வயல் வழியாக மயானத்திற்கு தூக்கி சென்று அடக்கம் செய்தனர். மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் பிணத்தை வயலில் சுமந்து செல்ல ஆட்கள் வர மறுக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பன்னீர்கோட்டகம் கிராமத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே மயானத்திற்கு சாலை வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல 2 கி.மீட்டர் தூரத்திற்கு உடனடியாக சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story