நாகை நகராட்சியில் 100 சதவீதம் மின்வினியோகம் அமைச்சர் தங்கமணி தகவல்
நாகை நகராட்சி பகுதியில் 100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்வினியோக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மின்சாரவாரிய பணியாளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.
பின்னர் மின்பணியாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதையும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் பணியினையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட நாகை துணைமின் நிலையத்தில் மின்வினியோக கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் 26 ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பணியாளர்கள் மழையை கூட பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் வந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜா புயல் இதுவரை இல்லாத பெரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலினால் 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 841 டிரான்ஸ்பார்மர்களும், 201 துணை மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயலின் போது பாதிப்படைந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களில், 46 ஆயிரம் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
மேலும், நாகை நகராட்சி பகுதிகளில் 100 சதவீத மின்வினியோகமும், பேரூராட்சி பகுதிகளில் 95 சதவீத மின்வினியோகமும், கிராமபுறங்களில் 30 சதவீத மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 178 ஊராட்சிகளில் மீதமுள்ள 95 ஊராட்சிகளில் மின்வினியோகம் வழங்க சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கஜா புயல் சிறப்பு பணி அலுவலர் ராஜாராமன், மின்தொடர் அமைப்பு கழக இயக்குனர் செந்தில்வேலன், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story