கஜா புயல் பாதித்த பகுதிகளில் கான்கிரீட் வீடுகள் கட்ட உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மத்திய மந்திரியிடம், அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனு
கஜா புயல் பாதித்த பகுதிகளில் கான்கிரீட் வீடுகள் கட்ட உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், அமைச்சர் ஆர்.காமராஜ் கோரிக்கை மனு அளித்தார்.
கொரடாச்சேரி,
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வந்தார். அப்போது மத்திய மந்திரியை, அமைச்சர் ஆர்.காமராஜ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கஜா புயலால் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்புயலால் மக்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கான்கிரீட் வீடுகள் கட்ட உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து மன்னார்குடி-திருமக்கோட்டை சாலையில் மரவாக்காட்டில் கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்ப தாவது:-
கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக மண்எண்ணெய் வேண்டும் என்று முதல்-அமைச்சர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பிரதமர் மோடி கூடுதலாக மண்எண்ணெய் வழங்க உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மண்எண்ணெய், அரசின் நிவாரண பொருட்கள் வழங்கப்படும்.. நீட் தேர்வு எழுத சான்றிதழ்கள், தொலைந்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story