குடிசை வீடுகளை மூட தார்ப்பாய் கேட்டு தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சுவார்த்தை
திருத்துறைப்பூண்டியில் குடிசை வீடுகளை மூட தார்ப்பாய் கேட்டு தாசில்தார் அலுவலகத்தை பெரிய கொத்தமங்கலம் கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர். இந்தநிலையில் புயலில் சேதமடைந்த குடிசை வீடுகளை மூடவும், தற்காலிகமாக போடுவதற்கும் தார்ப்பாய் கேட்டு ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ முற்றுகை போராட்டம் நடந்த தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அமைச்சரிடம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எங்களுக்கு உடனடியாக தார்ப்பாய் வழங்க வேண்டும். 2 முகாமாக அமைத்து உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story