திருவெண்ணெய்நல்லூர் அருகே: பள்ளி வேனில் சிக்கி சிறுவன் பலி - இழப்பீடு கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்


திருவெண்ணெய்நல்லூர் அருகே: பள்ளி வேனில் சிக்கி சிறுவன் பலி - இழப்பீடு கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:00 AM IST (Updated: 1 Dec 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி வேனில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் தில்சன் (வயது 4). இவன் அரசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். சிறுவன் தில்சனை அவனது பெற்றோர், பள்ளி வேனில் பள்ளிக்கு அனுப்பி வைப்பதும், மாலையில் பள்ளி முடிந்ததும் அதே வேனில் சிறுவன் தில்சன் வீட்டிற்கு வருவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தில்சன், வேனில் புறப்பட்டான். வேனை அரசூரை சேர்ந்த டிரைவர் மூர்த்தி (37) என்பவர் ஓட்டினார். இந்த வேன், சிறுவன் தில்சனை இறக்கி விடுவதற்காக மாலை 4 மணியளவில் திருமுண்டீச்சரம் காலனி பகுதியில் நிறுத்தப்பட்டது.

அப்போது வேனில் இருந்து புத்தகப்பையை தோளில் சுமந்தபடி தில்சன் கீழே இறங்கினான். அவன், வேனை விட்டு சற்று தூரம் நகர்ந்து செல்வதற்குள் டிரைவர், கவனக்குறைவாக வேனை இயக்கியதாக தெரிகிறது. இதில் வேனின் பக்கவாட்டு பகுதி தில்சனின் புத்தகப்பையை உரசியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் தில்சன், வேனுக்குள் சிக்கிக்கொண்டான். கண் இமைக்கும் நேரத்தில் தில்சனின் தலையில் வேனின் பின்சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தில்சன் பரிதாபமாக இறந்தான்.

இதையறிந்ததும் சிறுவனின் பெற்றோர் அங்கு ஓடி வந்து தில்சனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அந்த வேனையும் அதன் டிரைவர் மூர்த்தியையும் சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் அரிதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், சிறுவன் நிற்பதை கவனிக்காமல் செல்போன் பேசியபடியே வேனை அதன் டிரைவர் இயக்கியதால்தான் விபத்து நடந்துள்ளது, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே நேரத்தில் சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், குழந்தைகளை வேன்களில் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த போலீசார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பேரில் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மூர்த்தியை கைது செய்தனர். பள்ளி வேனில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவத்தினால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story