நூதனமுறையில் மணல் கடத்தல்: தடுக்க முயன்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் - லாரி உரிமையாளர், டிரைவர் கைது


நூதனமுறையில் மணல் கடத்தல்: தடுக்க முயன்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் - லாரி உரிமையாளர், டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே நூதன முறையில் மணல் கடத்தி சென்றதை தடுக்க முயன்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

கண்டமங்கலம், 

கண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சங்கராபரணி ஆறு, பம்பை ஆறு மற்றும் மலட்டாறுகளில் தொடர்ந்து நடந்த மணல் திருட்டை தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையில் போலீசார் கொடுக்கூர், முட்ராம்பட்டு, பக்கிரிப்பாளையம், கலித்திரம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலித்திரம்பட்டு-செல்லிப்பட்டு இடையே வந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த லாரியில் ஜல்லிக்கற்கள் இருந்தன. அதனை தோண்டிப்பார்த்தபோது மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு, அது தெரியாமல் இருப்பதற்காக மேற்பரப்பில் ஜல்லிக்கற்களை போட்டு பரப்பி இருப்பது தெரியவந்தது.

நூதனமுறையில் மணல் கடத்தி வந்தது பற்றி தனிப்படை போலீசார், கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் வந்த 2 பேர், போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், புதுவை மாநிலம் விநாயகம்பட்டை சேர்ந்த லாரி உரிமையாளர் அய்யனார் (வயது 37) என்பதும், டிரைவரான அதே ஊரைச்சேர்ந்த வீராசாமி (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story