திருவாரூர் அருகே சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர் மாணவ-மாணவிகள் அவதி
திருவாரூர் அருகே சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் நகர் பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 30-வது வார்டில் உள்ள சாப்பாவூர் நகரின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி ரெயில்வே காலனி வழியாக சென்றால் ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்பட நகர் பகுதிக்கு சென்று விடலாம். ஆனால் மற்றொரு வழியான தண்டலை, தியானபுரம் சாலையில் சென்றால் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும்.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் ரெயில்வே காலனி வழி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவாரூர் பகுதியில் பெய்த கனமழையினால் ரெயில்வே காலனி வழியாக சாப்பாவூர் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் சிரமப்பட்டு கடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் உடனடியாக சாப்பாவூர் சென்று அடைய முடியாத நிலை இருந்து வருகிறது. நகர் பகுதியில் சாப்பாவூர் இருந்தாலும் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப் படவில்லை. எனவே மாணவர்கள் நலன் கருதி சாப்பாவூர் செல்லும் சாலையில் குளம்போல் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story