முரட்டுத்தனம், கருணை உள்ளம் கொண்டவர் நடிகர் அம்பரீஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் குமாரசாமி உருக்கம்


முரட்டுத்தனம், கருணை உள்ளம் கொண்டவர் நடிகர் அம்பரீஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் குமாரசாமி உருக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:00 AM IST (Updated: 1 Dec 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

முரட்டுத்தனம், கருணை உள்ளம் கொண்டவர் நடிகர் அம்பரீஷ் என்று நினைவஞ்சலி கூட்டத்தில் குமாரசாமி உருக்கமாக பேசினார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகம் சார்பில் நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நினைவஞ்சலி கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா, மகன் அபிஷேக், மந்திரிகள் சா.ரா.மகேஷ், சி.எஸ்.புட்டராஜு மற்றும் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, நடிகை சரோஜாதேவி உள்பட கன்னட திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, அம்பரீசின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடிகர் அம்பரீசின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:- அம்பரீஷ் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும், பாதுகாப்பு படைக்காக காத்திருக்காமல், தனியார் காரில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு அம்பரீஷ் மகன் அபிஷேக் நின்றிருந்தார். அவரது தைரியத்தை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

ஒரு சொட்டு கண்ணீர் கூட இல்லாமல் இப்படியே தைரியமாக நிற்கிறாயே எப்படி? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், நான் கண்ணீர் விட்டால் எனது தாயார், இன்னும் அதிகமாக துயரம் அடைவார். அதனால் நான் கண்ணீர் வடிக்காமல் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார்.

இது அவரது தந்தையிடம் இருந்து அவருக்கு வந்த குணம். அம்பரீசின் உடலை எங்கு தகனம் செய்வது என்பது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்தேன். அதிகாரிகளை வரவழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டேன். அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக அனைத்து விஷயங்களும் நல்ல முறையில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இதற்கு முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, நடிகா் ராஜ்குமார் இறந்தார். இதுகுறித்த செய்தியை மருத்துவமனையினர் அரசுக்கு தெரிவிப்பதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு தெரிவித்தனர். இந்த செய்தி காட்டுத்தீயை போல் பரவி, ராஜ் குமார் வீட்டின் முன்பு மக்கள் கடல் போல் குவிந்தனர்.

உடல் அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது வன்முறை நடந்தது. பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோதே, பெரிய நடிகர்கள் ராஜ்குமார், அம்பரீஷ் மரணம் அடைந்தனர். இது எனது அதிர்ஷ்டமோ அல்லது துரதிருஷ்டமோ எனக்கு தெரியவில்லை.

இதுபற்றி அடிக்கடி எனது மனதில் தோன்றுவது உண்டு. ஏழைகளுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை எனது பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன். எனது பெற்றோருக்கு அடுத்தபடியாக நடிகர் ராஜ்குமாரே எனது வழிகாட்டி.

எப்படி நட்பு பாராட்ட வேண்டும் என்பதை அம்பரீசிடம் இருந்து கற்றேன். அவர் நல்ல இதயம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சி அதிகாரத்திற்காக தனது சொந்த விருப்பு, வெறுப்புகளில் அவர் எப்போதும் சமரசம் செய்து கொண்டது இல்லை. அம்பரீஷ் தான் நினைத்தப்படி வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார்.

அவரிடம் முரட்டுத்தனம் இருந்தது. அது மண்டியாவின் மண்ணின் குணம். அதே அளவுக்கு அவரிடம் உதவி செய்யும் கருணை உள்ளமும் இருந்தது. பட தயாரிப்புக்காக அவரிடம் சென்றால், அவர் இருக்கும் பணத்தை இழந்துவிட வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்புவார்.

அம்பரீசை போல் வேறு யாராவது முரட்டுத்தனமாக பேசி இருந்தால், அரசியலில் இருந்து அவரை வெளியேற்றி இருப்பார்கள். அவர் மரணம் அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினார். உடல் நலத்தை கவனித்து கொள்ளும்படி கூறினார். நானும் அவருக்கு இதே அறிவுரையை கூறினேன்.

அம்பரீசுடன் எனது மகனை நடிக்க வைக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அது நிறைவேறாமல் போய்விட்டது. விஷ்ணுவர்தன் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தேவேகவுடா பிரதமராக இருந்தபோது, நான், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் ஆகியோருடன் ஒரே விமானத்தில் டெல்லி சென்று, பிரதமர் வீட்டில் உணவு சாப்பிட்டோம். விஷ்ணுவர்தன் நினைவு மண்டபம் அமைப்பதில் சிக்கல்களுக்கு தீர்வு காண்பேன். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story