விழிப்புணர்வு ஊர்வலத்தை ஜெயந்தி பத்மநாபன் தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் பேரணாம்பட்டில் பரபரப்பு


விழிப்புணர்வு ஊர்வலத்தை ஜெயந்தி பத்மநாபன் தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் பேரணாம்பட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 30 Nov 2018 8:23 PM GMT)

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயந்தி பத்மநாபன் தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எய்ட்ஸ் நோய் தடுப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவினை தன்னார்வலர்கள் கோபிநாத், கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் திருஞானம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைப்பதாக அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கோர்ட்டு பணியாக திருப்பத்தூர் சென்றுவிட்டார்.

இதனால் டாக்டர் செந்தில்குமார் விழாவில் கலந்து கொண்டு அரசு ஆதிதிராவிட பள்ளி மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குடியாத்தம் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயந்தி பத்மநாபன் தனது ஆதரவாளர்களுடன் அரசு மருத்துவமனைக்கு வந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனால் விழாவில் கலந்து கொண்ட டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.


இதனை பார்த்த அ.தி.மு.க. நகர செயலாளர் எல்.சீனிவாசன், துணை செயலாளர் சிவாஜி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டி.பிரபாகரன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள், இந்த விழாவுக்கும், மருத்துவமனைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சிறப்பு அழைப்பாளராக யார் வருகிறார்கள் என்ற தகவல் தெரியாது என அ.தி.மு.க.வினரிடம் விளக்கம் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர்.

மேலும் வேலூர் மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின் மருத்துவ அதிகாரிகளிடம் போனில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story