திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி - போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு, ‘தினத்தந்தி’யின் கல்வி நிதியை, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வழங்கினார்.
திண்டுக்கல்,
‘தினத்தந்தி’ நாளிதழ் கல்விப் பணியில் பல்வேறு புரட்சிகளை செய்து வருகிறது. இதில் மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவித்து வந்தது.
அதேபோல் மாணவர் பரிசு திட்டத்தின் மூலம் மாவட்டம் தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் ‘தினத்தந்தி’யின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் ‘தினத்தந்தி’ கல்விநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு ‘தினத்தந்தி’ நிதி உதவி அளித்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு மாவட்டத்துக்கு தலா 10 மாணவ-மாணவிகள் வீதம் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் ரொக்கப்பரிசு வழங் கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் ‘தினத்தந்தி’ கல்விநிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற தகுதி பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ-மாணவிகள் 10 பேரின் பெயர் விவரம் வருமாறு:-
1.ச.சம்யுக்தா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர். 2.பா.உமாமகேஸ்வரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடமதுரை. 3.மு.முகமதுமுஹ்சின், எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். 4.ப.ராஜராஜேஸ்வரி, கலைமகள் மேல்நிலைப்பள்ளி, வடமதுரை. 5.தே.கனகலட்சுமி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். 6.பா.பானுமதி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். 7.ர.ரத்தினமாலா, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். 8.பா.கோகிலா, நா.சு.வி.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி. 9.சி.சுருதி, ஸ்ரீரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி, நெய்க்காரப்பட்டி. 10.செ.சங்கீத்குமார், ஆர்.சி.சகாயராணி உயர்நிலைப்பள்ளி, சின்னாளப்பட்டி.
இந்த 10 மாணவ-மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி’ கல்விநிதி வழங்கும் விழா, திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ கல்விநிதியை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ நாளிதழ் கல்விநிதி வழங்குகிறது. அதை தமிழ்நாடு, புதுச்சேரி என்று அனைத்து பகுதிகளிலும் வழங்குவதற்காக ‘தினத்தந்தி’க்கு பாராட்டுக்கள். மாணவ பருவத்தில் அனைத்தும் ஆழமாக பதிந்து விடும். எனவே, மாணவர்கள் படிப்பில் முழுமையாக அக்கறை செலுத்த வேண்டும்.
எனது தந்தை ஒரு சாதாரண மெக்கானிக் ஆவார். நான் படிப்பில் சாதாரண மாணவன். பிளஸ்-1 வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தேன். தலைமை ஆசிரியர் எனது தந்தையை அழைத்து விவரத்தை கூறினார். அதை கேட்டு எனது தந்தை அழுததால், நானும் அழுது விட்டேன். வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று அன்று முடிவு செய்தேன்.
டாக்டராக நினைத்தேன், மதிப்பெண்கள் குறைந்ததால் அது முடியவில்லை. விவசாய கல்லூரியில் சேர்ந்தேன். தேசிய அளவிலான தகுதித்தேர்வில் 7-ம் இடம் பிடித்து கல்விஉதவித்தொகை பெற்றேன். அதன்மூலம் மாணவ பருவத்திலேயே எனது தந்தைக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தேன். மேலும் குரூப்-1 தேர்வுக்கு படித்தேன்.
பெற்றோரின் எதிர்பார்ப்பு
ஓய்வு நேரத்தில் எல்லாம் படித்தேன். சக மாணவர்கள் பேச்சு, விளையாட்டு என்று சென்றாலும் நான் படிப்பில் கவனமாக இருந்தேன். நன்றாக தேர்வு எழுதி, போலீஸ் துணை சூப்பிரண்டாக தேர்வானேன். எனது தந்தை அனைவரிடமும் கூறி பெருமைபட்டார். முன்பு பள்ளியில் அழ வைத்ததற்கு, பதிலாக பெருமையை தேடிக் கொடுத்தேன். கேலி, கிண்டல் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
குழந்தைகளிடம், எந்த பலனையும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பது இல்லை. நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பது தான், பெற்றோரின் எதிர்பார்ப்பு. பெற்றோர் தான் நமக்கு எல்லாமே. எனவே, பெற்றோரை பெருமைப்படுத்தும் வகையில் படிக்க வேண்டும். படிப்போடு, விளையாட்டிலும் கவனம் செலுத்துங்கள்.
செல்போனை தவிருங்கள்
விளையாட்டு என்றதும் செல்போனை எடுத்து விடக்கூடாது. செல்போனில் விளையாடுவதால், அதன் ‘சார்ஜ்’ மட்டுமல்ல உங்களின் ‘சார்ஜும்’ தீர்ந்து விடும். பிளஸ்-2 முடிப்பதற்குள் கண் பார்வை பாதித்து விடும். தேவையற்ற எண்ணங்கள் மூளையில் பதிந்து விட்டால், பாடங்கள் பதியாது. எனவே, செல்போனை ஒதுக்கி விட்டு, மைதானத்துக்கு சென்று விளையாடுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பின்னர் தூக்கம் வரும்வரை படியுங்கள். பிளஸ்-2 வரையிலான படிப்பு தான், உங்கள் வாழ்க்கையின் அடித்தளம். எதிர்கால லட்சியத்தை முடிவு செய்யுங்கள். பெற்றோர், நண்பரிடம் அதை கூறுங்கள். லட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டே இருங்கள். சிறிது பாதை மாறினாலும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் லட்சியத்தை கூறி திருத்துவார்கள். கடின உழைப்பால் தான் சாதனையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
எனவே, லட்சியத்தை அடையும் வரை படித்து கொண்டே இருங்கள். நினைத்ததை முடிக்கும் வரை ஓயக் கூடாது. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். பள்ளிக்கு வெளியே சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும். பிறருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேற வேண்டும். இதனால் நாடும் முன்னேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் வாழ்த்தி பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களை ஊக்கப்படுத்த ‘தினத்தந்தி’ கல்விநிதி வழங்குகிறது. மாணவர்களின் திறமையை, மதிப்பெண்ணை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால், மதிப்பெண் ஒரு அளவீடாக இருக்கிறது. பொதுவாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தான் பரிசு வழங்குவார்கள். ஆனால், ‘தினத்தந்தி’ நாளிதழ் மதிப்பெண்ணை மட்டுமே பார்க்காமல், மாணவர்களின் பொருளாதாரம் கருதி கல்வி நிதி வழங்குவது பாராட்டுக்குரியது. இதன்மூலம் ஏழை மாணவர்கள் மீது ‘தினத்தந்தி’ அக்கறையாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்ச்சியில் திண்டுக்கல் முன்னேற வேண்டும். இதற்கு மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், என்றார்.
எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் முன்னணி நாளிதழ்களில் தலைசிறந்தது, ‘தினத்தந்தி’. மாவட்டந்தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 மாணவர்கள், பெற்றோரை அழைத்து கல்விநிதி வழங்கி ‘தினத்தந்தி’ கவுரவிக்கிறது. இதன்மூலம் மாணவர்கள், பெற்றோரின் மனதில் ‘தினத்தந்தி’ முத்திரை பதித்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கு மேலும் பல தொண்டுகளை ‘தினத்தந்தி’ செய்ய வேண்டும், என்றார்.
முன்னதாக ‘தினத்தந்தி’ திண்டுக்கல் மேலாளர் எஸ். லட்சுமணன் வரவேற்று பேசினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார். இறுதியில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பாண்டிய ராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story