ஆவாரம்பாளையத்தில்: ரெயில்வே மேம்பாலம் அமைக்க 22 டன் எடையுள்ள இரும்பு கர்டர்கள் - ராட்சத கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டன
ஆவாரம்பாளையத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க 22 டன் எடையுள்ள 7 இரும்பு கர்டர்கள் ராட்சத கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டன.
கோவை,
கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் வழியாக தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்வதால் அந்த கேட் அடிக்கடி திறந்து மூடப்பட்டது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், ஆவாரம்பாளையத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டு வதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அந்த கேட் மூடப்பட்டு பணிகள் தொடங்கின.
முதல்கட்டமாக ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் தண்டவாளத்தின் மீது உள்ள பாலம் மட்டும் ரெயில்வே துறையின் மேற்பார்வையில் கட்டப்பட்டு வருகிறது. அந்த பாலம் 20 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் தரையில் இருந்து 6½ மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக கான்கிரீட் தூண்கள் தண்டவாளத்தின் 2 பக்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் மீது ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக கான்கிரீட் தளம் அமைத்தால் அதற்காக சென்டிரிங் பலகைகள் அடித்து கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். ஆனால் சென்டிரிங் பலகைகள் அமைத்து அதன் கீழ் தண்டவாளத்தில் சாரம் அமைத்தால் ரெயில்கள் செல்ல முடியாது. எனவே ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தண்டவாளத்தின் மேலே பெரிய இரும்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.
அதன்படி கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட்டில் தண்டவாளத்தின் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தூண்களின் மீது இரும்பு கர்டர்களை தூக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்கான இரும்பு கர்டர்கள் நாமக்கல்லில் தயார் செய்யப்பட்டு பெரிய கண்டெய்னர் லாரி மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த இரும்பு கர்டர்கள் ஒவ்வொன்றும் 22 டன் எடை கொண்டவை. நீளம் 17 மீட்டர். ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக தண்டவாளத்தின் மேல் 7 இரும்பு கர்டர்கள் கான்கிரீட் தூண்கள் மீது தூக்கி வைக்கப்பட உள்ளன. அந்த இரும்பு கர்டர்களை தூக்குவதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த கிரேன் 250 டன் எடையை தூக்கும் திறன் கொண்டது. கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட இரும்பு கர்டர்கள் ஒவ்வொன்றாக கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டன.
ரூ.26 கோடி
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது ரெயில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் தூக்கி வைக்கப்பட்டுள்ள இரும்பு கர்டர்கள் மீது கான்கிரீட் தளம் அமைக்கப்படும். இதற்கு ஒரு மாதம் ஆகும். அத்துடன் ரெயில்வே துறையின் பணி முடிந்து விட்டது. அதன்பின்னர் மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலம் அமைக்கப்படும். ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ஆகும் மொத்த செலவான ரூ.26 கோடியில் 50 சதவீதமான ரூ.13 கோடியை ரெயில்வே நிர்வாகம் அளிக் கிறது.
ஆனால் ரெயில் தண்டவாளம் பகுதியில் மட்டும் பாலம் அமைக்க ஏறத்தாழ ரூ.7 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதி தொகை தமிழக நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
ரெயில்வே மேம்பாலத்தின் இரண்டு புறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் 12 மீட்டர் அகலத்திலும், 770 மீட்டர் நீளத்திலும் அமைய உள்ளது. இருவழிப் பாதையாக கட்டப்பட உள்ள இந்த பாலத்தின் கீழ் இரண்டு புறமும் வாகனங்கள் செல்வதற்காக சேவை சாலையும் அமைக்கப்பட உள்ளது.
ஆவாரம்பாளையம் ரெயில் தண்டவாளத்துக்கு கீழ் அந்த பகுதி மக்கள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை (சப்-வே) அமைக்கப்பட உள்ளது. அந்த சுரங்கப்பாதை ‘பாக்ஸ் புஷ்சிங்’ தொழில்நுட்பத்தில் ‘ஹைட்ராலிக்’ முறையில் அமைக்கப்படும். இதற்காக ரெயில் தண்டவாளத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது. ரெயில்கள் வழக்கம் போல செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில்வே கேட் மூடப்பட்ட போக்குவரத்து வேறு பாதை வழியாக மாற்றி விடப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டில் ரெயில் தண்டவாளத்தின் மீது மட்டுமே பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் 2 பக்கமும் நெடுஞ்சாலைத் துறை மூலம் கட்ட வேண்டிய பாலம் கட்டுவதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அவை எப்போது முடியும் என்று தெரியாது. அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, இருகூர் ஆகிய பகுதிகளில் முறையாக நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாததால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் பாதியில் நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story