கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கஜா புயலால் ஏராளமான தென்னை, வாழை மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று கார் மூலம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேராவூரணியில் உள்ள பயணியர் மாளிகைக்கு வந்தார்.
அங்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோருடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேராவூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தென்னை விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தென்னை விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கருப்பு முருகானந்தம், தஞ்சை மாவட்ட பா.ஜனதா தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்னை விவசாயிகள், மத்திய மந்திரியிடம் தங்கள் குறைகளை கூறினர். அப்போது அவர்கள் நாங்கள்(விவசாயிகள்) வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். எங்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள் என முழுமையாக நம்பி உள்ளோம் என்று கூறினர்.
கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மனவேதனை எங்களுக்கு புரிகிறது. மத்திய அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்பி சேதமதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. மாநில அரசும், சேதமதிப்பை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசிடம் பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகையை தமிழக அரசே செலுத்தி விட்டு விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரண தொகையில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளேன்.
தென்னை விவசாயிகள் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். மேலும் கர்நாடகா, ஒரிசா, அந்தமான் பகுதியில் இருந்து புதிய தென்னங்கன்றுகளை இங்கு கொண்டு வந்து நட நடவடிக்கை எடுக்கப்படும்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் மண்எண்ணெய்யை முழுமையாக வழங்கவும், புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களில் கூடுதலாக மண்எண்ணெய் வழங்க டேங்கர் லாரி மூலம் மண்எண்ணெய் கொண்டு வரப்பட்டு மாநில அரசு மூலம் வினியோகம் செய்யப்படும்.
வாழையை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரிடம் பேசி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை இந்த பகுதிக்கு வரவழைத்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வலியுறுத்துவேன். கிராமங்கள் மற்றும் நகரங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டி தரப்படும். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். எனவே புயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மனம் தளர்ந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story