மின்மாற்றியை சீரமைக்க கோரி: மின்வாரிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா - தொழுதூரில் பரபரப்பு


மின்மாற்றியை சீரமைக்க கோரி: மின்வாரிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா - தொழுதூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

மின்மாற்றியை சீரமைக்க கோரி மின்வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் தொழுதூரில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநத்தம், 

திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ளது பெரங்கியம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மேலும் சுற்றிலும் விவசாய நிலங்களும் அமைந்து இருக்கிறது. இந்த பகுதிக்கு மின்வினியோகம் செய்யும் வகையில், கிராமத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி திடீரென பழுதானது. இதனால் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்தது. பின்னர் மாற்று வழியில் மின்சாரம் வழங்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் வீடுகளில் மோட்டார், மின்விசிறி, மிக்சி என்று எதுவும் இயக்க முடியாத நிலையில் இருந் தது. அதோடு விவசாய நிலங் களிலும் மோட்டார்களை இயக்க முடியாமல் போனது.

மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டாரும் இயக்கமுடியாததால் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க மின்வாரியத்தினர் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாய இணைப்புக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் விவசாய மின் இணைப்பு வைத்திருக்கும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் கேட்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நேற்று தொழுதூரில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்திற்கு ஒன்று திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை.

இதையடுத்து, அதிகாரிகள் வந்து தங்களுக்கு உரிய பதில் அளிக்கும் வரையில் அங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி, அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைளை வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இருப்பினும் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் தங்கள் பகுதிக்கான மின்மாற்றியை உடனடியாக சரிசெய்து தரவில்லை என்றால், அடுத்தகட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். கிராம மக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story