மன அழுத்ததிற்காக போதைக்கு அடிமையாகக்கூடாது - போலீசாருக்கு டி.ஐ.ஜி. அறிவுரை


மன அழுத்ததிற்காக போதைக்கு அடிமையாகக்கூடாது - போலீசாருக்கு டி.ஐ.ஜி. அறிவுரை
x
தினத்தந்தி 1 Dec 2018 4:34 AM IST (Updated: 1 Dec 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

மனஅழுத்ததிற்காக போலீசார் போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்று ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி. காமினி அறிவுரை வழங்கினார்.

ராமநாதபுரம்,

போலீசாருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நிறைவாழ்வு என்ற பெயரில் சிறப்பு மனஅழுத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் போலீசார் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இந்த மனஅழுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள், 2 உளவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்களை கொண்டு ராமநாதபுரத்தில் போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு நேற்று ஆயுதப்படை வளாகத்தில் முதல்கட்ட மனஅழுத்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.காமினி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் வரவேற்று பேசினார்.

அப்போது டி.ஐ.ஜி.காமினி பேசியதாவது:–

 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 600 போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு மனஅழுத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. போலீசாருக்கு பணி காரணமாகவும், குடும்ப சுமை காரணமாகவும் மனஅழுத்தம் ஏற்பட்டு சமீபகாலமாக அதிகஅளவில் தற்கொலை செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் போலீசாருக்கான நிறைவாழ்வு என்ற மனஅழுத்த பயிற்சி திட்டத்தினை தொடங்கி உள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மனஅழுத்த பயிற்சி தொடங்கப்பட்டு யோகா, கவுன்சிலிங், தியானம், உடற்பயிற்சி, தூக்கமின்மை குறைபாடு, மன அழுத்தம் ஆகியவற்றிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட போலீசார் முதலில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். பணியில் கடமை உணர்வுடன் பொறுப்பாக செயல்பட வேண்டும். சின்னச்சின்ன விசயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு இருந்தால் மனஅழுத்தம் அதிகமாகும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

மேலும் மனஅழுத்தத்திற்காக போதைக்கு அடிமையாகி விடக்கூடாது. மனதை ஒருமுகப்படுத்த மனதிற்கு பிடித்த புத்தகம் படித்தல், விளையாட்டு, பாடல் கேட்பது போன்ற நல்ல விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதனைவிடுத்து மனது சரியில்லை என்று செல்போனை பார்த்துகொண்டே இருந்தால் மனச்சுமை மேலும் அதிகமாகும். மனஅழுத்தம் என்பது அனைவருக்கும் உண்டு. அதனை எதிர்கொண்டு மீளாவிட்டால் அவை நம்மை ஆட்கொண்டுவிடும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரபிரகாஷ், கோகுலகிருஷ்ணன், நடராஜன், அறிவழகன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story