ராமநாதபுரத்தில் வீடு புகுந்து கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகை– பணத்தை பறித்த வாலிபர்கள்


ராமநாதபுரத்தில் வீடு புகுந்து கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகை– பணத்தை பறித்த வாலிபர்கள்
x
தினத்தந்தி 1 Dec 2018 5:15 AM IST (Updated: 1 Dec 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு வந்துள்ளதாக கூறி வீடுபுகுந்து கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை தாக்கி கட்டிப்போட்டு நகை பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர். அவருடைய மனைவி ராமேஸ்வரி (வயது 53). ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நிலஅளவை பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சேகர் இறந்து விட்டார். மகள்களை திருமணம் செய்துகொடுத்துவிட்டதால் ராமேஸ்வரி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ராமேஸ்வரி, அலுவலகத்திற்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், உங்கள் வீட்டில் டெங்கு கொசுப்புழு உள்ளதா? என சோதனையிட்டு, மருந்து தெளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கடந்த வாரம்தான் வந்து சுத்தம் செய்து மருந்துதெளித்தார்கள், மீண்டும் ஏன் வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.

அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவிட்டு உள்ளனர், அதனால் மீண்டும் சோதனையிட்டு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரையும் ராமேஸ்வரி வீட்டின் உள்ளே அனுமதித்துள்ளார். உள்ளே வந்த 2 வாலிபர்களும் பிரிட்ஜின் பின்னால் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்ப்பதுபோல் நடித்து, திடீரென ராமேஸ்வரியை தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த ராமேஸ்வரியை இருவரும் கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்து, மீண்டும் சரமாரியாக தாக்கினர். அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 தங்க சங்கிலிகள், 2 வளையல்கள் என 9½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டனர்.

மேலும் ராமேஸ்வரியை கொன்றுவிடுவதாக மிரட்டிய அந்த வாலிபர்கள், வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரி கத்த முயன்றும் முடியாததால் மெல்ல தவழ்ந்து வெளியே வந்தார். அந்த பகுதியில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் அவரின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஓடிவந்து காப்பாற்றி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தப்பிச் சென்ற வாலிபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில், டெங்கு கொசு ஒழிப்பு என்ற பெயரில் வீடு புகுந்து அரசு பெண் ஊழியரை தாக்கி நகை, பணத்தை பறித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட நபர்கள்தான் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story