7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி, மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர், அமைச்சு பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன், ஜோசப் சேவியர், தவமணி செல்வம் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துராமன், முத்துச்சாமி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். இதில் கூட்டமைப்பு உறுப்பு சங்கங்களின் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.