விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரிக்கை


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2018 5:23 AM IST (Updated: 1 Dec 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி லதா, வேளாண் இணை இயக்குனர் சேகர், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, கூட்டுறவு இணை பதிவாளர் சேகர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் தரப்பில் சேங்கைமாறன், கன்னியப்பன், சந்திரன், தண்டியப்பன், வீரபாண்டியன், ஆதிமூலம், வக்கீல் ராஜா, அய்யாச்சாமி உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்

இதில் விவசாயிகள் பேசியதாவது:– 2017–18–ம் ஆண்டிற்கான விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகை குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவே அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2016–17–ம் ஆண்டில் வழங்கப்பட்ட காப்பீட்டு தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீத தொகை இதுவரை வழங்கவில்லை. அதையும் உடனடியாக வழங்க வேண்டும்.

இளையான்குடியை அடுத்த சூராணத்தில் பயிர் காப்பீடு செய்த 1,977 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியும், இதுவரை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மேற்படி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மானாமதுரையை அடுத்த தெ.புதுக்கோட்டையில் மணல் குவாரி அமைக்க கோர்ட்டு தடை உத்தரவு வழங்கிய நிலையில், அங்கு மணல் அள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பூர்வீக பாசனத்திற்காக வைகை தண்ணீர் திறந்து விடப்பட்டும் உரிய முறையில் பாசன கண்மாய்களில் தண்ணீர் நிரம்பவில்லை. பெரியாறு பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கண்மாய்களில் தண்ணீர் இல்லை. எனவே முறையாக கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழைக்கு பயிருக்கு காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வனத்துறையினர் ஆர்.எஸ்.பதி. மரங்களை வளர்க்கின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த மரத்திற்கு பதிலாக முந்திரி மரங்களை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கூறும்போது, 2017–18–ம் ஆண்டு பயிர்காப்பீடு வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசியதில் நமது மாவட்டத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட பயிர் காப்பீட்டில் நிறைய தவறுகள் உள்ளதாக கூறுகின்றனர். எனவே அவைகளை சரி செய்து 10 அல்லது 15 நாட்களில் இழப்பீட்டு தொகையை வழங்குவதாக கூறியுள்ளனர் என்றார்.

தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:– வைகை ஆற்றில் தடையை மீறி மணல் அள்ளவது தொடர்பான புகார் குறித்து கனிமவள உதவி இயக்குனரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவரது அறிக்க கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எஸ்.பதி. மரங்களை பொறுத்தவரை புதியதாக மரங்களை நடக்கூடாது என்று வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கண்மாய்களில் தண்ணீர் நிரப்பிட அந்ததந்த பகுதி விவசாயிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story