நாகர்கோவிலில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம


நாகர்கோவிலில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம
x
தினத்தந்தி 1 Dec 2018 5:31 AM IST (Updated: 1 Dec 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். மேலும் அங்கேயே கஞ்சி காய்ச்சியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் 11 இடங்களில் ரூ.9 கோடியில் உரக்கிடங்குகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு இடம்தான் 38-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் உரக்கிடங்குகள் அமைப்பதற்காக ஆரம்பகட்டப் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. தற்போது உரக்கிடங்குகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் உரக்கிடங்கு அமைந்தால் தங்களுக்கும், தங்களது பிள்ளைகளுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஊர் மக்கள் சார்பில் ஊர் நிர்வாகிகள் நகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது ஊர் நிர்வாகிகள் கூறுகையில், உரக்கிடங்கு அமைய இருக்கும் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், ஆரம்பசுகாதார நிலையம், நூலகம், பாலர் பள்ளி மற்றும் அம்மன் கோவில் ஆகியன அமைந்துள்ளது. ஏற்கனவே வலம்புரிவிளை குப்பை கிடங்கால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இங்கு உரக்கிடங்கு அமைக்க வேண்டாம். மாற்று இடத்தில் உரக்கிடங்கு அமைக்க வேண்டும் என்றனர். இதுகுறித்த கோரிக்கை மனுவையும் அவர்கள் கொடுத்தனர்.

அதற்கு பதில் அளித்த என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், வலம்புரிவிளை குப்பைக்கிடங்கு போன்று இது இருக்காது என்றும், இந்த உரக்கிடங்கு உங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை மட்டும் உரமாக்கும் கிடங்கு ஆகும். ஒரு நாள் குப்பை மறுநாள் இங்கு இருக்காது. அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறினார். ஆனாலும் ஊர் நிர்வாகிகள் அதற்கு உடன்படவில்லை.

இந்தநிலையில் உரக்கிடங்கு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் அந்த பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் அங்கேயே கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தினால் போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், ஊர் நிர்வாகிகளும் இந்த திட்டத்தை நிறுத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றனர். மேலும் இன்று (சனிக்கிழமை) கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story