48 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் கடன் வாங்கி அவதி: பாசிக் நிறுவன ஊழியர் தற்கொலை


48 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் கடன் வாங்கி அவதி: பாசிக் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2018 5:35 AM IST (Updated: 1 Dec 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

48 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுக்காக கடன் வாங்கி செலவழித்த பாசிக் நிறுவன ஊழியர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த கோர்க்காடு புதுநகர் அய்யனார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50), பாப்ஸ்கோ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

ராமச்சந்திரன் அவருடைய 2 மகள்களுக்கும் கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் அவர் வேலைபார்த்து வந்த பாசிக் நிறுவனத்தில் கடந்த 48 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், ராமச்சந்திரன் அந்த கடனை திரும்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் 3–வது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலையும் அவருக்கு இருந்து வந்தது.

இதற்கிடையே அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு வந்ததால் ராமச்சந்திரனுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமச்சந்திரன் தூக்குப்போட்டு தொங்கினார்.

அதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக செத்தார்.

இந்த சம்பவம் குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பளம் வழங்கப்படாததாலும், கடன் தொல்லையால் ஏற்பட்ட விரக்தியாலும் வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 2 தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் 2–வது சம்பளமாக தற்போது அதேபோல் 48 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் கடன்வாங்கி அவதிப்பட்ட பாசிக் நிறுவன ஊழியர் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story