மூங்கில் வீட்டுக்காகப் பரிசுபெற்ற இளைஞர்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் இளைஞர் ஒருவர், தான் 4 மணி நேரத்தில் கட்டி முடித்த மூங்கில் வீட்டுக்காக பரிசு பெற்றுள்ளார்.
ஏர்ல் பேட்ரிக் பார்லேல்ஸ் என்ற 23 வயது இளைஞர், தனது மூங்கில் வீட்டுக்குப் பெற்ற பரிசுத்தொகை, ரூ. 45 லட்சம்.
பிலிப்பைன்சில் வீடு கட்டும் செலவு அதிகரிப்பால், குடிசைகள் மலிந்துள்ளன. இந்நிலையில், குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியாக பேட்ரிக் ஒரு மூங்கில் வீட்டை வடிவமைத்துள்ளார்.
இந்த மூங்கில் வீட்டைக் கட்டுவதற்கு 1 சதுர மீட்டருக்கு சுமார் 50 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகிறது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பேட்ரிக், தாம் உருவாக்கியது ஒரு நடைமுறைக்கு உகந்த வீடு எனத் தெரிவித்துள்ளார். வழக்கமான வீட்டை விட இதில் கூடுதலான வசதி உள்ளது என்று கூறிய அவர், ‘சமூகத்தில் உருவாகும் குப்பையை பயனுள்ள வளமாக மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
மணிலாவைச் சேர்ந்தவரான பேட்ரிக் கட்டிய இந்த மூங்கில் வீட்டுக்கு ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் சர்வேயர்ஸ்’ என்ற அமைப்பு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையை அளித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ‘கியூபோ’ சமுதாய வீடு கட்டும் திட்டத்துக்கான மாதிரியை உருவாக்கப் பாடுபடப்போவதாக பேட்ரிக் கூறினார்.
மணிலா நகரின் மக்கள்தொகை 1.2 கோடி. அவர்களில் 40 லட்சம் பேர் மேம்படுத்தப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். அடுத்த மூன்றாண்டுகளில் இந்த நகருக்கு சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு குடி யிருப்புகள் வழங்குவது வளர்ந்துவரும் இந்த நகருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில்தான், பேட்ரிக்கின் மூங்கில் வீடு போன்ற முயற்சிகள் வரவேற்புப் பெறுகின்றன.
Related Tags :
Next Story