நெல்லையில் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் சேனை கிழங்கு
நெல்லையில் பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த சேனை கிழங்கு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
நெல்லை,
நெல்லையில் பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த சேனை கிழங்கு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
சேனை கிழங்கு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற தை மாதம் 1–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாள் முழுவதும் வயலில் இறங்கி பாடும் படும் விவசாயி, இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு, பல்வேறு வகையான காய்கறிகளை சமைத்து கதிரவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம் ஆகும்.
அத்தகைய பொங்கலுக்கு தேவையான காய்கறி பயிர்களை விவசாயிகள் தேர்வு செய்து பயிரிடுவார்கள். நெல்லை டவுன் பகுதியில் ஒரு விவசாயி சேனை கிழங்கு பயிரிட்டு உள்ளார். டவுனில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ரோட்டில் பாறையடி பகுதியில் திருநெல்வேலி கால்வாய் அருகில் சேனை கிழங்கு பயிரிடப்பட்ட உள்ளது. ஒரு ஆள் உயரத்துக்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படும் சேனை கிழங்கு இந்த ஆண்டு நெல்லை மாநகர பகுதியிலேயே விளைவிக்கப்பட்டிருப்பது மற்ற விவசாயிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அறுவடை பணி
இதுகுறித்து பாறையடியை சேர்ந்த விவசாயி ஊய்க்காட்டான் கூறியதாவது:–
எங்கள் வயலில் கடந்த ஆண்டு முதன் முறையாக சோதனை அடிப்படையில் சேனை கிழங்கு பயிரிட்டோம். அது எதிர்பார்த்ததை விட அதிக மகசூலை தந்தது. எனவே இந்த ஆண்டு 40 சென்ட் பரப்பளவில் சேனை கிழங்கு பயிரிட்டோம். தற்போது வளர்ந்துள்ள பயிர் மற்றும் கிழங்கை வருகிற ஜனவரி மாதம் 5–ந்தேதி முதல் 10–ந்தேதிக்குள் அறுவடை செய்வோம். அதாவது பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்போம். அதனை பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்ய வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள். ஒரு கிழங்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை இருக்கும். இந்த ஆண்டும் போது மான அளவு மகசூல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரும்பு–மஞ்சள் குலை
இதே போல் திருநெல்வேலி கால்வாயையொட்டி கரும்பு மஞ்சள் குலை செடிகளையும் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். அவையும் பொங்கலுக்கு ருசிக்கவும், வழிபடவும் தயார் நிலையில் வளர்ந்து நிற்கின்றன. இது தவிர நெல்லை பகுதியில் சேந்திமங்கலம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளும் மஞ்சள் செடிகள் பயிரிடப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story