குடியாத்தம் அருகே பரபரப்பு: பாலாற்றில் மணல் அள்ளிய 100 மாட்டுவண்டிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு


குடியாத்தம் அருகே பரபரப்பு: பாலாற்றில் மணல் அள்ளிய 100 மாட்டுவண்டிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 1 Dec 2018 6:33 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே பாலாற்றில் மணல் அள்ளிய 100 மாட்டுவண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம்,

வேலூர் மாவட்ட பாலாற்றில் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணல் கடத்தும் வாகனங்கள் தினமும் பறிமுதல் செய்யப்பட்டாலும் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

குடியாத்தம் அருகே பட்டு கிராமத்தில் உள்ள பாலாற்றில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் அங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியிலிருந்து கடந்த ஜூலை மாதம் முதல் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் தினமும் மணல் அள்ளப்பட்டு வந்தது.

தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் பட்டு, ஆலாம்பட்டறை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலையில் மணல் குவாரி இயங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாட்டுவண்டிகளில் மணல் எடுப்பது தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதனால் கொதிப்படைந்த கிராம பொதுமக்கள் நேற்று பட்டு கிராமத்தில் பாலாற்றில் அமைக்கப்பட்ட மணல் குவாரிக்கு சென்றனர். அங்கு 100–க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் மணல் அள்ளப்பட்டு கொண்டிருந்தது.

அந்த மாட்டுவண்டிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுக்கா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரபு, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெயக்குமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறியதாவது:–

தினசரி 100–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தனர். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்ஆதாரம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படகூடிய அபாயம் உள்ளது. நிலத்தடி நீரும் உப்பாக மாறி வருகிறது. 100–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தினசரி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பட்டு சுடுகாட்டு பகுதியிலும் மணல் எடுக்கப்படுகிறது. இது தொடர்ந்தால் சடலங்களை புதைக்க இடம் இல்லாமல் போகும். அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதால் பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே உடனடியாக மணல் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அப்போது கோரிக்கை தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்கனவே டோக்கன் அளிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் மட்டும் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற போராட்டம் நடந்த நிலையில் நேற்று மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


Next Story