கேசர்குளி அணையின் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கேசர்குளி அணையின் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட வருவாய் அலுவலர்(சிப்காட்) துர்காமூர்த்தி, வேளாண் இணை இயக்குனர் வீராசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம், தோட்டக்கலை துணை இயக்குனர் அண்ணாமலை, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி மேலாளர் பார்த்தசாரதி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி அணையின் கால்வாயில் 6 கி.மீ. தூரத்திற்கு புதர் மண்டி உள்ளது. இதனால் பருவமழை பெய்யும்போது அணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். வணிக வங்கிகளை விட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அதிக வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே விவசாய பணிக்கான நகைக்கடன்களுக்கு வட்டி வீதத்தை குறைக்க வேண்டும்.
வாரச்சந்தைகளில் விவசாய விளைபொருட்களை கொண்டுசெல்வோருக்கு நுழைவு கட்டணமாக அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவும் முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி உள்பட அனைத்து வகையான விவசாய பயிர்களையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வந்து பயிர்சேதம் ஏற்பட்டால் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான் பேசுகையில்,கேசர் குளி அணையின் கால்வாயை தூர்வாரி சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயிர்காப்பீட்டு திட்டத்தில் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும். தர்மபுரி மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேசினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம் பேசுகையில்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகைஈட்டு கடனை விவசாயிகள் வட்டியில்லாமல் பெற முடியும். இந்ததிட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம். 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயி ஒரு ஏக்கருக்கு பயிர்கடன் பெற்றால் 4 ஏக்கருக்கு நகை ஈட்டுகடன்பெற முடியும். இந்த திட்டத்தில் கடன் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுதொடர்பாக உடனடியாக எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார். கூட்டத்தில் விவசாயிகள், துறை சார்ந்த அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story