வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு


வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 1 Dec 2018 10:06 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு கலெக்டர் ரோகிணி வங்கிக்கு நேரில் சென்று ரூ.4 லட்சம் கடன் பெற்று தந்தார். அவரது மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் அங்கீஸ்பானு. இவரது மகள் ஷஹேனாஸ்பேகம். இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி தங்களது குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலைமை உள்ளதாகவும், எனவே, வங்கியில் கடனுதவி பெற்றுத்தருமாறு நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து அந்த மாணவியின் நிலைமையை புரிந்து கொண்ட கலெக்டர், அவருக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று நினைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். உடனடியாக, சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு கலெக்டர் ரோகிணி நேரில் சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம், சேலத்தை சேர்ந்த ஒரு மாணவி பல் மருத்துவம் படித்து வருகிறார். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளார். எனவே, அவருக்கு வங்கியில் கடனுதவி வழங்கினால் அவரது கனவு நிறை வேறும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவிக்கு உடனடியாக கடனுதவி வழங்க கலெக்டர் ரோகிணியிடம் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, மாணவி ஷஹேனாஸ்பேகத்திற்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி பேர்லேண்ட்ஸ் இந்தியன் வங்கியில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ரோகிணி நேரில் கலந்துகொண்டு அந்த மாணவிக்கு மருத்துவ படிப்பை தொடர வசதியாக ரூ.4 லட்சம் கடனுதவி வழங்குவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். அப்போது, கலெக்டருக்கு மாணவி ஷஹேனாஸ்பேகம் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

“பெண்கள் நாட்டின் கண்கள். பெண் கல்வி என்பது மிக, மிக முக்கியம். நான் மாவட்ட கலெக்டர் என்ற முறையில் இந்த உதவியை செய்யவில்லை. நானும் ஒரு பெண் என்பதாலும், பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து மாணவி என்னிடம் மனு அளித்த மறுநாளே இந்த உதவியை செய்து கொடுத்துள்ளேன்.

இதனை பெற்றுக்கொண்ட அந்த மாணவி, நன்றாக படித்து சிறந்த பல் மருத்துவராக உருவாகி ஏழை, எளியோருக்கு சேவை செய்வேன் என்று கூறியுள்ளார். பெண்களின் கல்வி எக்காரணத்தை கொண்டும் தடைபடக் கூடாது. பெண்கள் தன்னம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி தான் மிக, மிக முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செல்வராஜ், முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார், இந்தியன் வங்கியின் பேர்லேண்ட்ஸ் கிளை மேலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் ரோகிணியின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story