சேலத்தில் அதிரடி சோதனை: ரூ.12 லட்சம் கலப்பட வெல்லம் பறிமுதல்


சேலத்தில் அதிரடி சோதனை: ரூ.12 லட்சம் கலப்பட வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 1 Dec 2018 10:09 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள வெல்ல மண்டியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே வெல்லம் ஏல மண்டி செயல்பட்டு வருகிறது. சேலம், ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தற்போது அதிகளவில் வெல்லம் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் வெல்லத்தில் சர்க்கரை மற்றும் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை வெல்ல மண்டிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கொண்டு வந்த வெல்லத்தில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? என்றும், தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற்று ‘பேக்கிங்’ செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். மேலும் வெல்ல உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்றுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது.

அப்போது பலர் கொண்டு வந்த வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 40 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். வெல்லத்தின் மாதிரியை சேகரித்த பின்னர், அவற்றை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதவிர வெல்லம் கொண்டு வந்த சரக்கு வாகனங்களும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 35 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறும்போது, ‘தொடர்ந்து வந்த புகாரின் பேரில் வெல்ல மண்டியில் சோதனை நடத்தினோம். அப்போது வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 40 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாதிரிக்காக சேகரிக்கப்பட்ட வெல்லத்தை உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த அறிக்கை வந்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்றார்.

Next Story