கம்பம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
கம்பம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கம்பம்.
கம்பம் நகராட்சியில் நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் 66 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 96 பேரும் பணியில் உள்ளனர். இதில் நிரந்தர துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் கிடைக்க கூடிய ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்குவதில் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் சங்கரனிடம் துப்புரவு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை முறையிட சென்றபோது அவர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் நகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதார அலுவலர் சுருளிநாதன், கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அபுதாகீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது துப்புரவு தொழிலாளர்கள், ஈட்டிய விடுப்புத்தொகையை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும், ஒருமையில் பேசுவதை கமிஷனர் தவிர்க்க வேண்டும், நகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்படும் போது உள்ளூர்காரர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த கமிஷனர் நான் யாரையும் ஒருமையில் பேசவில்லை. நகராட்சியில் பணி புரியும் அனைவரையும் சகோதரத்துவமாகத்தான் பார்த்து வருகின்றேன். ஈட்டிய விடுப்புத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் .இதையடுத்து அனைவரும் கலைந்து பணிக்கு சென்றனர். காலையிலேயே துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சியை முற்றுகையிட்ட சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story