விஷம் குடித்து பெண் முகவர் தற்கொலை: பண மோசடி செய்ததாக போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை பழனி அருகே பரபரப்பு


விஷம் குடித்து பெண் முகவர் தற்கொலை: பண மோசடி செய்ததாக போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை பழனி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, விஷம் குடித்து பெண் முகவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் தங்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறி கீரனூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர், 

பழனியை அடுத்த தாளையூத்து போதுபட்டி அருகே கடந்த 28-ந்தேதி சாலையோர புதரில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்த சாமிநாதபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தது கீரனூரை சேர்ந்த ராமதாஸ் மனைவி பிரேமா (வயது 50) என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் எதற் காக தற்கொலை செய்துகொண்டார்? என கீரனூர் போலீசார் உதவியுடன் சாமிநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரேமா தபால் நிலையத்தில் ‘தொடர் வைப்பு’ சேமிப்பு திட்டத்துக்கான முகவராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அந்த திட்டத்தில் கீரனூர், தொப்பம்பட்டி, மேல்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலரை சேர வைத்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்று தபால் நிலையத்தில் செலுத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த சூழ்நிலையில் ‘தொடர் வைப்பு’ சேமிப்பு திட்டத்துக் கான பணத்தை முறையாக தபால் நிலையத்தில் அவர் செலுத்துவதில்லை என வாடிக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பிரேமாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். மேலும் தங்கள் பணத்தை உடனடியாக திரும்ப தரும்படியும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த பிரேமா விஷம் குடித்து தற்கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது தற்கொலை செய்துகொண்ட பிரேமா தபால் நிலைய சேமிப்பு திட்டத்தின் கீழ் தங்கள் பணத்தை சேமித்து உதவுவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். சேமிப்பு திட்டத்துக்கான ஆவணங்கள் எதையும் தங்களிடம் அவர் தரவில்லை. எனவே எங்கள் பணத்தையும், சேமிப்பு திட்டத்துக்கான ஆவணங்களையும் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் பேசிய போலீசார், பிரேமாவின் வீட்டில் சோதனையிட்ட போது, சேமிப்பு திட்டத்துக்கான ஆவணங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. அவை விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்ற பிரேமா அதனை முறையாக தபால் நிலையத்தில் செலுத்தினாரா? என்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்து போன பிரேமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் தற்போது திருப்பூரில் வசிக்கின்றனர்.

Next Story