சினிமா தயாரிப்பாளரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு தாய்-மகள் உள்பட 6 பேர் கைது


சினிமா தயாரிப்பாளரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு தாய்-மகள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 1 Dec 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், காணாமல் போனதாக தேடப்பட்ட சினிமா தயாரிப்பாளரை கொன்று கால்வாயில் உடலை வீசிய பயங்கரம் நடந்துள்ளது. வாடகை வீட்டை காலி செய்யும்படி கூறியதால் தீர்த்து கட்டிய தாய்-மகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு விஜயநகர் அருகே ஆர்.பி.சி. லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்குமார் ஜெயின் (வயது 62). சினிமா தயாரிப்பாளரான இவர், மல்லசந்திராவில் சொந்தமாக பிளாஸ்டிக் தொழிற்சாலையும் நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக பேடராயனபுரா அருகே தீபாஞ்சலி நகரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை ரமேஷ்குமார் வாடகைக்கு விட்டிருந்தார்.

கடந்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி மதியம் தீபாஞ்சலி நகருக்கு சென்று வாடகை வசூலித்துவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு ரமேஷ்குமார் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அக்கம், பக்கத்தில் தேடியும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரமேஷ்குமாரை காணவில்லை என்று விஜய நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், 29-ந்தேதி இரவு கெங்கேரி அருகே துபாசிபாளையா, ரெயில்வே பேரல் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு முதியவர் உடல் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கெங்கேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சாக்கடை கால்வாயில் இருந்து முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் கடந்த சில நாட்களாக காணாமல் போனவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

அப்போது விஜயநகர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் ரமேஷ்குமார் காணாமல் போனதாக வழக்குப்பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் கால்வாயில் பிணமாக கிடந்த முதியவர், காணாமல் போன சினிமா தயாரிப்பாளர் ரமேஷ்குமார் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன் யாரோ மர்ம நபர்கள், ரமேஷ்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை சாக்கடை கால்வாய்க்குள் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும் கொலையாளிகளை கைது செய்ய கெங்கேரி உதவி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ரமேஷ்குமார் கொலை தொடர்பாக தாய், மகள் உள்பட 6 பேரை கைது செய்து கெங்கேரி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பேடராயனபுரா தீபாஞ்சலி நகரை சேர்ந்த சபீனா தாஜ், அவரது மகள் ஹீனா, இஸ்லாம் கான், அப்துல் காசிம், சையத் அகமது, முகமது ஜுபேர் என்று தெரியவந்தது. இவர்களில் ரமேஷ்குமார் வீட்டில் ஹீனா தனது கணவர் முகமது நசீர், தாய் சபீனா தாஜுடன் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். ரமேஷ்குமாரும், முகமது நசீரும் நண்பர்கள் ஆவார்கள். இதனால் தனது வீட்டை முகமது நசீருக்கு வாடகைக்கு ரமேஷ்குமார் கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக முகமது நசீர் அவதிப் படுவதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக ரமேஷ்குமாருக்கு வாடகை கொடுக்காமல் ஹீனா இருந்துள்ளார். ஆனால் வாடகை கொடுக்கும்படி கேட்டு ஹீனாவுடன் ரமேஷ்குமார் சண்டை போட்டுள்ளார். மேலும் வீட்டை காலி செய்யும்படியும் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹீனா ரமேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக வாடகை வாங்க வீட்டிற்கு வரும்படி அவரை அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற ரமேஷ்குமாரை தனது தாய் சபீனா தாஜ், உறவினர்களான இஸ்லாம் கான், அப்துல் காசிம், சையத் அகமது, முகமது ஜுபேர் ஆகியோருடன் சேர்ந்து ஹீனா கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலையை மறைக்க ரமேஷ்குமாரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரியவந்துள்ளது. கைதான 6 பேர் மீதும் கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story