திண்டுக்கல்லில், பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி குளிக்க சென்றபோது பரிதாபம்
திண்டுக்கல்லில், பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 17). இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வேடப்பட்டி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தற்போது அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால், வேடப்பட்டியில் உள்ள பள்ளத்தில் கார்த்திகேயன் குளிக்க சென்றுள்ளார். பள்ளத்தில் குளித்தபோது, அவர் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
அவர் குளிக்க சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரை பெற்றோர் தேடி சென்றனர். அப்போது கார்த்திகேயன் பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, வேடப்பட்டியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளி செல்வதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி, மாணவர் பலியாகி உள்ளார். எனவே, இந்த இடத்தில் மண் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story