திண்டுக்கல்லில் வேகமாக பரவும் சிக்குன்குனியா காய்ச்சல்


திண்டுக்கல்லில் வேகமாக பரவும் சிக்குன்குனியா காய்ச்சல்
x
தினத்தந்தி 2 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், வேகமாக சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வருகிறது.

முருகபவனம், 

‘ஏடிஸ்’ கொசுக்களால் டெங்கு காய்ச்சல், காற்றில் பரவும் வைரஸ் கிருமிகளால் பறவைக்காய்ச்சல், புளூ, சிக்குன்குனியா போன்ற காய்ச்சலும் பரவுகிறது. ‘ஏடிஸ்’ கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகிறது. அதனால் வீட்டில் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்துகிறது. இந்நிலையில் பருவ மழைக்கு பிறகு புயல்மழை பெய்தது. கடந்த சில நாட்களாக காலையில் வெயில், மாலையில் மழை, இரவில் கடும்குளிர் என ஒரே நாளில் 3 விதமான தட்பவெப்பநிலை மாறி, மாறி நிலவுகிறது. இதனால் காற்றில் வைரஸ் கிருமிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதையொட்டி திண்டுக்கல்லில் கோவிந்தாபுரம், ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் புளூ, சிக்குன்குனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இத்தகைய காய்ச்சலின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கையாக இருந்தால் காய்ச்சலின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

சளி, காய்ச்சல், அதனுடன் உடல்வலி போன்றவை வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். அதுவே சிக்குன்குனியா காய்ச்சலாக இருந்தால் சளி, காய்ச்சல், உடல்வலி இவற்றுடன் கடுமையான மூட்டுவலி, கை, கால்களில் வீக்கம் உண்டாகும். குறைந்தபட்சம் 15 நாட்கள் அல்லது 1 மாதம் வரையில் கூட மூட்டுவலி இருக்கும். காய்ச்சலின் அறிகுறி தென்பட்டவுடன் தாமதிக்காமல் டாக்டரிடம் சென்று முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை பெறும் நாட்களில் மருந்து, மாத்திரைகளுடன், சத்தான ஆகாரம் மற்றும் ஓய்வு அவசியம் தேவை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story