மயிலம் அருகே 1,524 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


மயிலம் அருகே 1,524 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:45 PM GMT (Updated: 1 Dec 2018 6:11 PM GMT)

மயிலம் அருகே 1,524 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

மயிலம், 

மயிலம் அருகே தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு தழுதாளி, பாதிராபுலியூர், மயிலம், ஆலகிராமம், அவ்வையார்குப்பம், ரெட்டணை, பெரியதச்சூர், பேரணி, நெடிமொழியனூர் ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த 1,524 மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் திண்டிவனம் தாசில்தார் பிரபுவெங்கடேசன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், அ.தி.மு.க. மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன், நடுவனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் புலியனூர் விஜயன், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சம்மந்தம், மயிலம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் மனோகரன், பெரமண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பெலா.சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

இதை தொடர்ந்து விழுப்புரம் பிடாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி மறுவாழ்வு பெறுவதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகிறது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத சில எதிர்க்கட்சிகள், மக்களுக்கு எதையும் செய்யாமல் தமிழக அரசின் செயல்பாட்டை பார்த்து குறை சொல்கிறார்கள்.

கஜா புயல் நிவாரண பணியில் அரசின் செயல்பாட்டை பார்த்து முதலில் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். பின்னர், இந்த அரசு நல்ல பெயர் பெற்று விடக்கூடாது என்பதற்காகவும், அரசு நிவாரண பணிகளை விரைந்து செய்து வருவதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமலும், மு.க.ஸ்டாலின், அதை அரசியலாக்குகிறார். அவர் சென்று வந்த பிறகு அங்கு சில திட்டமிட்டு செய்யப்பட்ட போராட்டங்கள் நடைபெற் றது. அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அரசு செய்யும் மக்கள் சேவையை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் மக்கள் துயரத்தில் இருக்கும்போது கூட அரசியல் செய்கிறவர்கள் இந்த நாட்டில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள். 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார், அவர் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தயவில்தான் அமைச்சர் ஆனார் என்பதை முதலில் நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story