சிதம்பரம் வண்டிக்கேட்-மணலூர் இடையே பாசிமுத்தான் ஓடையில் தற்காலிக பாலம் அமைப்பு


சிதம்பரம் வண்டிக்கேட்-மணலூர் இடையே பாசிமுத்தான் ஓடையில் தற்காலிக பாலம் அமைப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 1 Dec 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் வண்டிக்கேட் மற்றும் மணலூர் இடையே உள்ள பாசிமுத்தான் ஓடையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் வண்டிக்கேட் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாசிமுத்தான் ஓடை பாலம் வழியாக மணலூர், கீரப்பாளையம், புவனகிரி வழியாக கடலூர் செல்ல மெயின்ரோடு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வண்டிக்கேட் அருகில் இருந்த பாசிமுத்தான் ஓடை பாலம் உடைந்தது. இதனால் அந்த சாலை வழியாக வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக கடலூர் மார்க்கத்தில் இருந்து சிதம்பரத்துக்கு வரும் பஸ்களும், சிதம்பரம் பகுதியில் இருந்து கடலூர் மார்க்கத்திற்கு செல்லும் பஸ்களும் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. அதேபோல் அனைத்து வாகனங்களும் தற்போது அந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.

பாசிமுத்தான் ஓடை பாலம் உடைந்ததால் ஒரு கிலோ மீட்டரில் சிதம்பரத்துக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும், தற்போது 8 கிலோ மீட்டர் சுற்றி சிதம்பரத்துக்கு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி தையாக்குப்பம், லால்புரம், மேட்டுக்குப்பம், மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அவதி அடைகிறார்கள். இதை கருத்தில் கொண்டு பாலத்தின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலமும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது. எனவே பாசிமுத்தான் ஓடையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாசிமுத்தான் ஓடையில் தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று வரும் வகையில் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பாசிமுத்தான் ஓடையில் இரும்பு கம்பிகள் மற்றும் தகரத்தால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக பாலம் வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பாதசாரிகளும் அந்த பாலத்தின் வழியாக செல்கிறார்கள். இது தற்காலிக பாலம் என்றாலும் கூட, அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் பாசிமுத்தான் ஓடையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Next Story