போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் அபேஸ் செய்த வாலிபர் கைது
போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 70). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று இவர், பணம் எடுப்பத்ற்காக நெல்லிக்குப்பம் கடைத்தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவரிடம், தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் கூறி ரூ.2 ஆயிரம் எடுத்து தருமாறு கூறினார். உடனே அந்த வாலிபர், ரூ.2 ஆயிரத்தை எடுத்து, தன்னிடம் இருந்த போலி ஏ.டி.எம். கார்டை முருகேசனிடம் கொடுத்தார். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு முருகேசன், ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அந்த ஏ.டி.எம். கார்டை உபயோகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர், வங்கிக்கு சென்று ஏ.டி.எம். கார்டையும், வங்கி கணக்கையும் சரிபார்த்தபோது ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்தை காணவில்லை. மேலும் அந்த ஏ.டி.எம். கார்டு போலியானது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போதுதான், தனது ஏ.டி.எம். கார்டை வாலிபர் வைத்துக்கொண்டு, போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவம் அடங்கிய வீடியோவை கைப்பற்றி தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அருண்குமார்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story