விருகம்பாக்கத்தில் கத்திமுனையில் மிரட்டி டாக்டரை கடத்த முயற்சி ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்


விருகம்பாக்கத்தில் கத்திமுனையில் மிரட்டி டாக்டரை கடத்த முயற்சி ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:45 AM IST (Updated: 2 Dec 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் கத்திமுனையில் மிரட்டி, டாக்டரை கடத்த முயற்சி செய்த ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 42). குழந்தைகள் நல டாக்டரான இவர், விருகம்பாக்கம் சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனி 2-வது தெருவில் சொந்தமாக கிளனிக் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கிளனிக்கில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து முடிந்ததும் டாக்டர் கார்த்திகேயன், வீட்டுக்கு செல்வதற்காக கிளினீக்கை பூட்டிவிட்டு காரில் ஏற முயன்றார்.

அப்போது அங்கு வந்த 3 பேர், திடீரென டாக்டர் கார்த்திகேயனை அடித்து, உதைத்தனர். பின்னர் கத்தியை காட்டிமிரட்டி, அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அவரது காரிலேயே கடத்திச்செல்ல முயன்றனர்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். டாக்டர் கார்த்திகேயனும் தன்னை கடத்த முயன்ற மர்ம நபர்களுடன் போராடினார். பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பயந்துபோன கடத்தல் ஆசாமிகள், அங்கிருந்து தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் போலீசாரிடம், பிடிபட்ட நபரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர், புதுக்கோட்டையை சேர்ந்த லோகபிராமன்(21) என்பதும், தன்னுடன் வந்தவர்கள் சத்யா, மணிகண்டன் என்பதும், 3 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர் கள் என்பதும் தெரியவந்தது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன் வேறு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அப்போது பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் டாக்டர் கார்த்திகேயன் வேலை பார்த்த மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு கார்த்திகேயன் சிகிச்சை அளித்தார்.

ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானதாக கூறி மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினார். அங்கு அனுமதிக்கப்பட்ட 2 நாளில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

தனது குழந்தை இறந்ததற்கு டாக்டர் கார்த்திகேயன்தான் காரணம் என்று கருதிய அந்த குழந்தையின் தந்தைதான் டாக்டரை கடத்தி வரச்சொன்னதாகவும், அதன்படியே 3 பேரும் அவரை கடத்த வந்ததாகவும் போலீசாரிடம் லோகபிராமன் தெரிவித்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்மையிலேயே அந்த குழந்தையின் தந்தை சொன்னதற்காக டாக்டரை கடத்த வந்தனரா? அல்லது பணம் பறிக்கும் நோக்கில் டாக்டரை கடத்த வந்தவர்கள், போலீசிடம் சிக்கிக்கொண்டதால் இவ்வாறு பொய் சொல்கிறாரா?, இதுபோல இவர்கள் வேறு எங்காவது ஆள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓடிய இவரது கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான லோகபிராமனிடம் இருந்து கத்திகள், கயிறு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story