அரசின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தனியார் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு; கூட்டமைப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் பேச்சு


அரசின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தனியார் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு; கூட்டமைப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

அரசின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தனியார் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூட்டமைப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் பேசினார்.

ஊட்டி,

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜூணன், இணை செயலாளர் ஆல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கூட்டமைப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் 120 தனியார் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் மொத்தம் 40 ஆயிரம் பள்ளி வாகனங்கள் பட்டி, தொட்டி எங்கும் கல்வி பணிக்காக இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் தினமும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு ரூ.10 கோடிக்கு டீசல் போடப்படுகிறது. இதன் மூலம் அரசின் பொருளாதாரத்தை உயர செய்வதில் தனியார் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தனியார் பள்ளிகள் 1½ கோடி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளித்து வருகிறது.

1½ கோடி மாணவர்களுக்கு அரசிடம் இருந்து பணம் வாங்காமல் சொத்து வரி, நில வரி, நீர் வரி, மின்சார வரி, வருமான வரி, சேவை வரி, விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம், அங்கீகார கட்டணம் போன்றவை செலுத்தப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பணச்சுமையை குறைத்து வருகிறோம். அரசு பல கோடி ரூபாயை செலவழித்தும் செய்ய முடியாததை தனியார் பள்ளிகள் செயல்படுத்தி வருகிறது. ஆங்கிலம், அறிவியல், கணினி, பண்பாடு, ஒழுக்கம், விளையாட்டு, யோகா போன்ற கல்விகளை அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மாணவர்களுக்கு அளித்து வருகிறோம்.

தனியார் பள்ளிகளில் 1½ லட்சம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. 40 ஆயிரம் ஓட்டுனர்கள், 40 ஆயிரம் நடத்துனர்கள் மற்றும் பலருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நீலகிரி மாவட்ட மக்கள் பாசத்திற்கும், உதவிக்கும் பெயர் போனவர்கள். மலை மாவட்டத்தில் கடுங்குளிரில் மழை கோட், உல்லன் ஆடை, தொப்பி அணிந்து பள்ளிக்கு சென்று மாணவர்கள் படித்து வருகிறார்கள். கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி வருகிறார். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமச்சீர் கல்வி திட்டத்தை அப்புறப்படுத்துவேன் என்று கூறினார். கல்வி கட்டணத்துக்காக பல உதவிகளை செய்தார். அவர்தம் தாய் மொழியிலேயே படிப்பதோடு, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாணவர்கள் படிப்பிற்காக அல்லும், பகலும் ஆசிரியர்கள் உழைத்து கொண்டு இருக்கிறார்கள். பாடங்களை மாணவர்கள் நன்றாக வாசிக்க பழக வேண்டும். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் கனவுகளை மாணவர்களாகிய நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர், சிறந்த ஆசிரியர் ஒருவருக்கு என விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., சாந்தி ராமு எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story