சிறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் உழவர் சந்தைகளை செயல்படுத்த வேண்டும்; ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை
சிறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் உழவர் சந்தைகளை செயல்படுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
விவசாயிகள் விளைவித்த பொருட்களை மக்களிடத்தில் நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவர் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. சிறு, குறு விவசாயிகளை முன்னேற்றம் அடைய செய்ததில் உழவர் சந்தை திட்டம் முக்கிய பங்கு வகித்தது. விவசாயிகளுக்கும், பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வகையில் உழவர் சந்தைகள் இயங்கின.
ஆனால் தற்போது இந்த உழவர் சந்தை திட்டம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகள் செய்யப்படவில்லை. முறையான நிர்வாக அமைப்பு இல்லை. எனவே பல பகுதிகளிலும் உழவர் சந்தைகள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இவ்வாறு உழவர் சந்தை திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டது தமிழக அரசின் தவறு.
அதே நேரம் திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதையும் குறிப்பிட வேண்டும். எனவே லட்சக்கணக்கான சிறு,குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உழவர் சந்தைகளை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த தமிழக முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு உழவர் சந்தை என்ற கணக்கில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் இடைத்தரகர்கள் குறுக்கீடுகளை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறி உள்ளார்.